search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிர் இழப்பு"

    பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy
    சென்னை:

    பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோயம்புத்தூர் மாவட்டம் கொமாரபாளையத்தைச் சேர்ந்த முகம்மது ஷெரிப் மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போதும்; காஞ்சீபுரம் மாவட்டம் தேன்பாக்கத்தைச் சேர்ந்த தண்டபானி, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியும் உயிர் இழந்தனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் மணப்பாக்கத்தைச் சேர்ந்த வடிவேல் பணி செய்யும்போதும்; புதுக்கோட்டை மாவட்டம் அரசமலை நல்லூரைச் சேர்ந்த பெரியசாமி மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதும் உயிர் இழந்தனர்.

    நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை காளிசெட்டிபட்டி புதூரைச் சேர்ந்த சரோஜா அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததாலும்; அரியலூர் மாவட்டம் மேலக்காவட்டாங்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்தராசுவின் மனைவி சத்தியப்பிரியா, வயலில் இருந்து புல்கட்டு தூக்கி வரும்போது மின்கம்பி உரசியதாலும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் கொரநாட்டுக்கருப்பூரைச் சேர்ந்த ஆனந்குமாரின் மகன் தமிழழகன், நீர்தொட்டியின் மின்சார பொத்தானை தொட்டபோதும்; காஞ்சிபுரம் மாவட்டம் மேலையூரைச் சேர்ந்த அர்ச்சுனனின் மகன் சுப்பிரமணி, விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததாலும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் ‘பி’ கிராமத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் மின்சார கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். விழுப்புரம் மாவட்டம் பொற்படாக்குறிச்சியைச் சேர்ந்த வீரமணியின் மகள் தர்ஷினி மின்சாரம் தாக்கியதால் மரணமடைந்தார்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் பொன்னுசாமி, வயலில் உள்ள மின் மோட்டார் கம்பியை தொட்டபோதும்; ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் உள்வட்டம், பூமாவிலங்கைச் சேர்ந்த முருகேசனின் மகன் கணேசன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததிலும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் உட்கடை நாகப்பன்பட்டியைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகன் வினோத்குமார் வேப்ப மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழைகள் பறித்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பியை தொட்டபோதும்;

    திருநெல்வேலி மாவட்டம் கொடிக்குறிச்சியைச் சேர்ந்த பரமசிவத்தேவரின் மகன் புதியவன், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததாலும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டையைச் சேர்ந்த எல்லப்பனின் மகன் பசுபதி, ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணற்றை சரிசெய்யும் பணியின் போதும்; கிருஷ்ணகிரி மாவட்டம் மாவத்தூர் கூட்டுரோட்டைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் ராஜேந்திரன் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோதும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    கடலூர் மாவட்டம் அரங்கமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகன் பிரஷாந்த், வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டும்; திருப்பூர் மாவட்டம் ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் பிரபு மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதும், மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

    இவர்கள் உயிர் இழந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிர் இழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இச்சம்பவங்களில் உயிர் இழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy #Tamilnews

    ×